மூன்று குறுநாவல்கள்
மொழித் திறனும் வடிவ நேர்த்தியும் கொண்டு கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவமே நாவல் என்பர். வாழ்வு குறித்தான சுயமான தேடல் இன்றி பொழுது போக்குக்காக வாசகனை மகிழ்விப்பதற்காக எழுதப்படுகின்ற நாவல்களும் உண்டு. நாவல் என்பது வாழ்க்கைச் சித்தரிப்பையோ கருத்து ஒன்றையோ ஓர் உணர்வெழுச்சியையோ வெளிப்படுத்துவது அல்ல. ஒரு படைப்பாளி, தான் வாழும் சமூகத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது சோகமான முடிவுகளை வாழ்க்கையின் போக்கிலே கற்பனை கலந்து எதார்த்தமாக அமைத்துக் காட்டுவதே நாவலாகும். மலரன்னை மக்களின் சமூக வாழ்க்கையை வர்க்க வேறுபாடுகளை காதல் நிகழ்வுகளை உரையாடல் மொழிவழி நாவலுக்கூடாக தெளிவாக வெளிப்படுத்தியவர். இவருடைய காகிதப்படகு என்னும் தொகுப்பில் உயிர்துளி, காகிதப்படகு, காலத்திரை என மூன்று குறுநாவல்கள் இடம் பெறுகின்றன. இவருடைய நாவல்களில் கதை மாந்தர்கள் தனித்து இயங்காது சமூகத்தின் அங்கமாக இயங்குகின்றனர். இவர்கள் சமூகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செவ்வனே செய்கின்றனர். மலரன்னையின் இம்மூன்று நாவல்களும் சமூகம் கதை மாந்தரை எவ்வாறு அணுகுகிறது என்பதையும் எப்படி அவர்களின் வாழ்வில் பாதிப்பைச் செலுத்துகிறது என்பதையும்;; நேரடியாகச் சித்திரிக்கின்றது.
மலரன்னையின் உயிர்த்துளி நாவல் குழந்தை பேறின்மையால் வாழும் மாந்தரை சமூகம் எவ்வாறு நோக்கும் என்பதை பதிவு செய்கிறது. சமூகத்தில் எவ்வளவுதான் உயர்மட்டத்தில் ஒருவர் வாழ்ந்தாலும் அவருக்கு குழந்தையில்லை என்றால் அவரை சமூகம் மட்டுமல்ல உறவுகளும் ஒரு மனிதனாகவே பார்;க்காது என்பதையும் இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது. குழந்தைப் பேறில்லாதவர்களைச் சமூகம் புறக்கணிக்குமேயானால் அது சமூகத்தின் குற்றமே தவிர தனிமனிதன் குற்றமல்ல. அச்சமூகத்துக்கு முன்மாதிரியாக குழந்தைப் பேறில்லாதவர்களும் சமூகத்தில் உயர்வாக வாழலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒருநாவலை மலரன்னை படைத்திருந்தால் அவர் பாராட்டத்தக்கவர். ஒரு மனிதனுக்கு குழந்தை இல்லை என்றால் அதற்குத் தீர்வு குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பது ஒன்றுதான்; என்னும் கருத்தை மேலேழுந்தவாரியான இந்நாவல் முன்வைப்பதே இந்நாவலின் பெரும்பலவீனம்.குழந்தைப் பேறில்லாவிட்டாலும் ஒரு மனிதன் இயல்பாக தனக்குரிய சுயத்தோடு வாழலாம் என்பதை இந்நாவல் காட்டி இருக்குமேயானால் இந்நாவலை யதார்த்த நாவல் என்று கூட கூறியிருக்கலாம். அதனையும் இந்நாவல் செய்யத் தவறிவிட்டது.
காகிதப்படகு நாவல் பெற்றாரின் சம்மதமின்றி காதலித்து திருமணம் செய்த பெண் யுத்த சூழலில் கணவனின் துணையின்றி நிராதரவான நிலையில் குழந்தையுடன் தனியொருத்தியாக நின்று எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறாள் என்பதை எடுத்துரைக்கிறது. குடும்ப வறுமையும் சமூகத்தின் ஏளனப் பேச்சுகளும் ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது என்பதை விளக்கும் இந்நாவல் வாழ்க்கையின் ஓட்டம் என்பது நம்பிக்கையில் தான் நடக்கிறது என்பதையும் விளக்கி நிற்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் காரணமின்றி சிறையில் அடைக்கப்படுவதும் உறவினர்களுக்கு அவர்களின் கைது குறித்த விடயங்கள் அறிவிக்கப்படாத நிலையில் அவரைப் பிரிந்து குடும்ப அங்கத்தவர்கள் படும் வேதனையையும் தந்தையை இழந்தநிலையில் குழந்தை எதிர்நோக்கும் உளவியல் சிக்கல்களையும் இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது. காண் உலகின் நிகழ்கால இருப்பை காட்சிப்படுத்தும் இந்நாவல் யதார்த்த வாழ்வின் அனுபவங்களாகச் சுவர்கிறது.
குடும்பத்தில் மனைவியின் இழப்பினால் கணவன் படும் துயரையும் அதேசமயம் மகளைப் பிரிந்த தந்தை படும் வலியையும் ஏக்கத்தையும் எடுத்துரைக்கும் நாவலே காலத்திரை. குடும்பத்தின் அச்சாணியும் ஆணிவேரும் மனைவிதான் என்பதை விளக்கி நிற்கும் இந்நாவல் சுயநலத்துக்காக மாமனாரை அனுசரித்து வாழும் சராசரி மருமகளையும் காட்சிப்படுத்துகிறது. அதேசமயம் பிறருக்கு பரோபகாரம் செய்து வாழும் வாழ்வது தான் உண்மையான வாழ்வு என்பதையும் இந்நாவல் கூறிநிற்கிறது. மகள் சிவகாமி தாயின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து ஒட்டும் உறவுமின்றி பதுளையில் வாழுகிறார். இச்சமயத்தில் சிவகாமியின் தாய் மங்களம் இறந்து விடுகிறார். எட்டுச் செலவு முடிய சிவராமனின் மகன் ஆருரன் தன்குடும்பத்தாருடன் வவுனியா சென்றுவிட இளைய மகன் தன்குடும்பத்தாருடன் கொழும்பு சென்றுவிட மூத்த மகன் சரவணன் அவரோடு அவ்வீட்டிலேயே குடும்பத்தாருடன் தங்கி விடுகிறான். வீட்டின் வசதி கருதி சரவணனின் மனைவி நிர்மலாவும் சுயநலத்துடன் அவரை ஒருவாறு அனுசரித்து வாழச் சம்மதிக்கிறாள். கல்லூரியில் படிக்கும் அயல்வீட்டுச் சந்திரன் சிவராமன் வீட்டில் தங்கிப் படிப்பதுடன் அவருக்கும் உதவியாகவும் இருக்கிறான். கல்லூரியில் இருந்து யாழ் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சந்திரன் ராக்கிங் காலப்பகுதியில் தனக்கு அடுத்த வருடத்தில் படிக்கும் சிவகாமியின் மகள் தமிழரசியை காபாற்ற அந்த நட்பு இருவருக்கும் காதலாய் மாறுகிறது. இறுதியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்படும் சிவராமனை சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க தன் பணிநேரத்தில் தமிழரசி கவனித்துக் கொள்கிறாள். தாத்தா, பேத்தி இருவருக்குமான நட்பு கடந்த கால விடயங்களை இரை மீட்க உதவுகிறது. ஈற்றில் மகளும் தந்தையும் ஒன்று சேர நாவல் நிறைவுக்கு வருகிறது.
வாழ்தலில் பெறும் ஒட்டு மொத்த அனுபவங்களின் விளைவே இம்மூன்று நாவல்கள். ஒவ்வொரு முறையும் படைப்பாளி பயணிக்கும் பாதை புதியதன்று. அது ஈழத்து நாவல்கள் தொடர்ந்து ஓடிய தடத்திலேயே பயணிக்கிறது. மலரன்னையின் சிறுகதைகள் மனித மனங்களின் வலியைப் பேசுகின்றன. ஆண், பெண் உறவுகளின் மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், சிக்கல்களைப் பதிவு செய்யும் மலரன்னையின் நாவல்கள் குடும்பச் சிதைவுகளையும் குற்றவுணர்வில் அலைக்களிக்கப்படும் இதயங்களையும் வாழ்வின் மீளாத துயரங்களையும் காவிவருகின்றன.
0 comments:
Post a Comment