சோவியத்,
சீனப்புரட்சிக்குப்பின்னர் ஈழத்துக்கவிதைகளில் மார்க்சியக் கொள்கையின் தாக்கம் அதிகம்
செல்வாக்குச் செலுத்தியுள்ளது. சமுதாயப் புரட்சியை அடுத்து மக்களைச் செலுத்தக்கூடிய
பொதுவுடமை பற்றிய முற்போக்குத்தன்மையை மார்க்சீயக்கொள்கை, ஈழத்துத் தமிழ்க்கவிதையில்
விதைத்துள்ளது. இலக்கியம் சமுதாயத்தின் பிரதிபலிப்பு என்னும் பிரதிபலிப்புக்கோட்பாடு
மார்க்சிய அழகியலில் முதன்மையானது. அவ்வகையில் ஈழத்தில் மார்க்சியம் புறவயமான சமுதாய
வாழ்வியலை - சமூக இருப்பை இயக்கவியல், அரசியல், வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில்
அழகியல் கண்கொண்டு நவீன கவிதைக்கூடாக நோக்குகிறது. நடைமுறையிலுள்ள சோஷலிச மெய்மைகளைப்
பிரதிபலிக்கும் வகையில் ருசியப்புரட்சி நிகழ்ந்த போது அங்கு உருவெடுத்த “சோஷலிச நடப்பியல்”, ஈழத்துக்கவிதைகளில்
சுரண்டலுக்கான எதிர்ப்பாகவும், வர்க்கப் போராட்டத்துக்கும் சமுதாய மாற்றத்துக்குமான
வரவேற்பாகவும், பொதுவுடமைச் சமுதாய உருவாக்கத்துக்கான ஆதரவாகவும், மேதினத்துக்கான அறைகூவலாகவும்,
உழைப்புக்கும், அவ்வுழைப்பை நல்கும் பாட்டாளிக்கும் பாராட்டாகவும் ஒலித்தது.
இலங்கையில்
நிலவுடமையாளர்களின் ஆதிக்கம் வேரூன்றிய நிலையில் தனிநபர் சுரண்டல் வலுத்தது. ஆங்கிலேயர்
ஆட்சியைத் தொடர்ந்து கைத்தொழிற் பேட்டைகள் முக்கியத்துவம் பெற்றன. இலாப நோக்கைக் கருத்தில்
கொண்டு இயங்கிய பெரும்பாலான கைத்தொழிற்சாலைகள் மக்கள் நலத்தைக் கருத்தில் கொள்ளவில்லை.
அத்தொழிற்பேட்டைகளில் முதலை நல்கிய முதலாளிகள் அங்கு கூலியாட்களாக வேலை பார்த்த தொழிலாளர்
வாக்கத்தினரின் உழைப்பைச் சுரண்டினர்.இதன் வெளிப்பாட்டை ஈழத்துக்கவிதைகளும் பிரதிபலித்தன.
இக்கவிதைகள் முதலாளித்துவத்துக்கு எதிரான குரலாகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஆதரவான
குரலாகவும் உருவெடுத்தன.
“உழைப்பாளித் தோழா உன் கரங்களிங்கு
உயர்ந்து விட்டால் விலங்கெல்லாம் தகர்ந்து போகும்
உழைப்போரைச் சுரண்டுகின்ற அமைப்பும் சாயும்”
முதலாளித்துவப்
பொருளாதாரமுறை, மக்கள் யாவரையும் சமத்துவமாக மதிக்கும் சமவுடமை பொருளதாரமுறை ஒன்று
உருவாக்கப்படுவதற்கு முட்டுக்கட்டையாக அமையலாம். ஆனால் அதன் வரவைத் தடுக்கமுடியாது.
இதனைச் சாருமதியின் கவிதைகளிலும் காணலாம்.
“வர்க்கப் போரின்
வழியை மறிக்கலாம்
அதன் வரவைச்
சிதைக்க
முடியாது
ஏனெனில் அது
அஸ்தமிக்காத
சூரியன்
ஆம் இன்றைய
இலங்கைக்கும்
இதையே
நான் செய்வேன் ”
மக்களிடையே
சமத்துவத்தைப் பேணும் சோஷலிசம் ஈழத்துக்கவிஞாகள் பலரால் மதித்துப் போற்றபட்டது. அக்கனவு
1980களில் ஈழத்துக்கவிதைகளில் கோலொச்சியது.
“சோசலிசம் என்று
சொன்னாலே போதும்
சுகமாக இருக்கும்
சொர்க்கம் அதுதானே!
வேஷ மதில் இல்லை
வேறு பாடில்லை
வெயர்வை மிகச் சிந்தும்
வேலை தான் உண்டு
சமத்துவமாம் புதிய
சாம்ராஜ்ஜியம் அதிலே
சகலரும் பிரசை சரியாசனம் எங்கும்! ”
உழைப்பையும்
உழைக்கும் வர்க்கத்தையும் மார்க்சியசித்தாந்தம் போற்றுகின்றது. உழைப்பாளார் பேதங்களை
மறந்து தமக்குள் ஒன்றுபடும் போது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் நாட்டை அபிவிருத்தி
செய்ய முடியும். புதுவை இரத்தினதுரையின் “என் கவிதை” நெஞ்சில் உரம் கொண்டு எழும் பாட்டாளி வர்க்கத்தின்
எழுச்சியைப் பாடுகிறது.
“பாராளும் வர்க்கமது பாட்டாளி வர்க்கம் ...புயலாக
எழுந்திங்கு போராடி
நாளை புதியதொரு வையமதைப் பிறப்பிக்கப் போகும்
”
புதுவையின்
வரிகள் பொதுவுடமைச் சித்தாந்தத்தை வரவேற்று உழைக்கும் வர்க்கத்தின் உயர்வைக் கண்டு
பொங்கிப் பூரிக்கிறது.
வரலாற்றுப்
பொருள் முதவாதத்தை முன்னிறுத்தி கார்ல்மார்க்ஸ் கூறுவதைப் போன்று முதாளித்துவச் சமூக
அமைப்பில் ஏகபோக முதலாளித்துவம் தலைதூக்கும் போது சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டம்
பாட்டாளி மக்களால் முன்னெடுக்கப்படும். அப்போராட்டம் பாட்டாளி மக்களின் ஆட்சியை ஸ்தாபிக்கும்.
இப்பின்னணியில் எழும் சுரண்டலுக்கு எதிரான கவிதைகள் உரிமைகளும் உடைமைகளும் பெற்று தொழிலாளர்
நிறைவாக வாழவேண்டும் என்னும் கருத்தைக் கூறிநிற்கின்றன.
“ஆண்டுகள் பலதாய் அடிமை நிலையில்
அடியுதை பட்டவர்அழுது
வாழ்ந்தவர்
பூண்டுள்ள நிலையைப் போக்கிட எண்ணி
போராடத் துணிந்து
புரிந்தனர் செயல்கள்
...களத்தில் பாய்ந்து கவலை களைவோம்
ஆண்டிடும்
உங்கள் ஆணவம் அழிக்கும்
அரிகள் நாங்கள்... ”
நாவண்ணனின்
“கதை, கவிதை, கண்ணீர்”
அடிமைத் தளை அறுக்க எழும் வதையுண்ட பாட்டாளியின் எழுச்சியை பாடி நிற்கிறது. நாட்டின்
வறுமை, சாதி, மதம், பிரதேசவாதம், சீதனம், சுரண்டல் முதலானவற்றைப் போக்க சோசலிசம் ஒன்றே
தீர்வு என்பதை உணர்ந்து ஈழத்துக்கவிஞர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் செயற்பட்டன.
மார்க்ஸிய சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்ட “ஈழப் புரட்சி அமைப்பு” , “ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி”
முதலான அமைப்புக்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் இணைந்த வகையில் இக்கருத்துக்களை
முன்னெடுத்தன. அவ்வகையில் பசீரின் “வெளிச்சத்துக்கு வருவோம்” இக்கருத்துக்களை உள்வாங்கி
எழுதப்பட்ட கவிதையாகும்.
“சோசலிச
கொழு
கொம்பு கொண்டு
மனித மரங்களில்
இன்னும்
ஒட்டிக்கிடக்கும்
வறுமை
அழுகல்
பழங்களைக்
கொய்து
சிக்கலுக்குச்
சிக்கெடுப்போம்...
”சாதி- மதம்
பிரதேசவாதம்
இனம் - மொழி
சீதனம், அநீதி
சுரண்டல்
போன்ற
திமிங்கிலங்களை
கருத்துப்பற்றிக்
கொண்ட
மக்கள்
‘நெத்தலிகள்’
கூட்டமாக
நின்று
உடைத்துண்டு விடுகின்ற
விடுதலை-
வெப்ப ஏப்பத்தில்
முதலாளிகளின்
ஆதிக்க
நீரில்மூழ்கி
அவிந்து
நாறிப்போகும்... ”
அதிகாரவா;க்கத்தின்
எதிர்ப்பின் குரலைப் பதிவு செய்யும் “உரிமையின் கீதம்”, க.தணிகாசலம் தொழிலாளர்நலனில்
கொண்ட அக்கறையையும் வர்க்கப்புரட்சி மீது அவர்கொண்ட ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.
“உழைக்கும் மக்களின்
விடுதலை
மூச்சு
அடுத்தவர்
உழைப்பை
பறித்திட எண்ணும்
அதிகார வர்க்கத்தைச்
சுடும்
நெருப்பு...”
தொழிலாளர்
வர்க்கத்தின் விடுதலை என்பது முதலாளி வா;க்கத்தின் அழிவில் பிறக்கும் என்னும் கார்ல்
மார்க்ஸின் கூற்றை க.தணிகாசலத்தின் கவிதை சுட்டிநிற்கிறது.
உழைப்பாளர்தினம்
எனப்படும் தொழிலாளா;தினமாகிய மேமாதம் முதலாம் திகதி 1856இல் தொழிலாளார் வர்க்கத்தின்
தொடர்போராட்டத்தை தொடர்ந்து தொழிலாளரின் வெற்றிநாளாய் விடியல் நாளாய் எழுச்சிகண்டது.
1889ஆம் ஆண்டு முதல் உலகம் முழுக்க ஒட்டு மொத்த தொழிலாளர்களின் புரட்சி விழாவாக இது
வியாபகம் பெற்றது. இந்நாளின் எழுச்சியை ஈழத்துக்கவிதையிலும் காணலாம். புதுவை இரத்தினதுரையின்
“தென்னிலங்கைத் தோழனுக்கு”, சடகோபனின் “மேதினம்”, நாவற்குழியூர் நடராசனின்
“மேதினநாள்”,
இ பவித்திரனின் “மே தினப்பாடல்” முதலான கவிதைகள் மேதினத்தின் நோக்கையும்
அதன் சிறப்பையும் நினைவு கூருகிறது.
மேதினத்தன்று
இன, மத பேதமின்றி செங்கொடிகள் தாங்கி, வர்க்கப் போராளிகள் சகிதம் அறைகூவி, அணிவகுத்து
நிற்பதை புதுவை இரத்தினதுரையின் “தென்னிலங்கைத் தோழனுக்கு” காட்சிச் சித்திரிப்பு
வாயிலாக வெளிப்படுத்துகிறது.
“நண்பா...
வருடத்தில்
மேமாத முதல் நாளிற்
சந்திப்போம்.
‘புதிய நகரசபை’ முன்றலிலே...
செங்கொடிகள் தாங்கித் திரிவோம்.
தலைவர்கள் எங்களுக்குத் தெரியாத- எத்தனையோ சொல்வார்கள்
கைதட்டி ஆர்ப்பரித்துக் களிப்போம்.
பிhpந்திடுவோம்
பொய்யில்லா
இந்தப் ‘புரட்சிக்கனவு’களில் மெய்மறந்து தூங்க
மேமாதம் வரும்
அப்போ... மீண்டும் சந்திப்போம்...
வடக்கிலிருந்து
பஸ்ஸில் வருவார்கள்
தமிழர்கள்
கிழக்கிலிருந்து பஸ்ஸில் வருவார்கள் சோனகர்கள்
தெற்கிலிருந்து பஸ்ஸில் வருவார்கள் சிங்களவர்கள்
எல்லோரும்
சேர்ந்து
மேமாத
முதல் நாளில்
‘வர்க்கப் போர் பற்றி வாதிடுவோம்
புரட்சிபற்றித்
தா;க்கங்கள்
செய்வோம்
‘சமவுடமைச் சமுதாயம்’ பற்றிப்
‘பறைவோம், பஸ்சேறித் திரும்பிடுவோம்...”
மார்க்ஸியக் கொள்கையின்
தாக்கத்தால் ஈழத்தில் சோசலிச யதார்த்தப் போக்கை உள்வாங்கி வெளிவந்த கவிதைகள், மனிதனைக்
குறித்து அதிகம் சிந்தித்தன. கொள்கைச் சித்தாந்த அடிப்படையில் சமூகத்தில் நிகழும் அநீதிகளைச்
சுட்டிக்காட்டி எழுந்த தமிழ்க்கவிதைகள் ஈழத்து இலக்கியச் செல்நெறியில் புதிய வளர்ச்சிப்
போக்கை உண்டு பண்ணியதுடன் மக்களிடையே மிக நெருங்கிய தொடர்பையும் கொண்டிருந்தன