125x125 Ads

கடவுளின் மலம்

0 comments

 கடவுளின் மலம்




வட்டத் தொப்பி வடிவில்

சபிக்கப்பட்ட எச்சமாய்

பூமியில் விழுந்தது.

விழுந்த மலம்

உடனடியாக 

அரசின் கவனத்துக்கு

கொண்டு வரப்பட்டு

அரசுடைமையாக்கப்பட்டது

கடவுளின் மலம் பற்றி

அறிந்த மக்கள் அதனை

வணக்கத்துக்குரியதாக 

ஆக்கும்படி வேண்டினர்.

அரசு மறுத்து விட

எதிர்க்கட்சி 

அதனையே

தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு

ஆட்சியைப் பிடித்தது.

சொன்ன வாக்குக்கமைய

கோயிலும் கட்டப்பட்டு

மலமும் பிரதி~;டை செய்யப்பட்டது.

கோயிலால் நகரம் பெருத்தாலும்

நகர மறுத்த நாற்றமாய்

மக்கள் மனமெங்கிலும் மலம்

                        (2003)

மலரன்னையின் காகிதப்படகு

0 comments

 மூன்று குறுநாவல்கள்

மொழித் திறனும் வடிவ நேர்த்தியும் கொண்டு கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவமே நாவல் என்பர். வாழ்வு குறித்தான சுயமான தேடல் இன்றி பொழுது போக்குக்காக வாசகனை மகிழ்விப்பதற்காக எழுதப்படுகின்ற நாவல்களும் உண்டு. நாவல் என்பது வாழ்க்கைச் சித்தரிப்பையோ கருத்து ஒன்றையோ ஓர் உணர்வெழுச்சியையோ வெளிப்படுத்துவது அல்ல. ஒரு படைப்பாளி, தான் வாழும் சமூகத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது சோகமான முடிவுகளை வாழ்க்கையின் போக்கிலே கற்பனை கலந்து எதார்த்தமாக அமைத்துக் காட்டுவதே நாவலாகும். மலரன்னை மக்களின் சமூக வாழ்க்கையை வர்க்க வேறுபாடுகளை காதல் நிகழ்வுகளை உரையாடல் மொழிவழி நாவலுக்கூடாக தெளிவாக வெளிப்படுத்தியவர். இவருடைய காகிதப்படகு என்னும் தொகுப்பில் உயிர்துளி, காகிதப்படகு, காலத்திரை என மூன்று குறுநாவல்கள் இடம் பெறுகின்றன. இவருடைய நாவல்களில் கதை மாந்தர்கள் தனித்து இயங்காது சமூகத்தின் அங்கமாக இயங்குகின்றனர். இவர்கள் சமூகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செவ்வனே செய்கின்றனர். மலரன்னையின் இம்மூன்று நாவல்களும் சமூகம் கதை மாந்தரை எவ்வாறு அணுகுகிறது என்பதையும் எப்படி அவர்களின் வாழ்வில் பாதிப்பைச் செலுத்துகிறது என்பதையும்;; நேரடியாகச் சித்திரிக்கின்றது.

மலரன்னையின் உயிர்த்துளி நாவல் குழந்தை பேறின்மையால் வாழும் மாந்தரை சமூகம் எவ்வாறு நோக்கும் என்பதை பதிவு செய்கிறது. சமூகத்தில் எவ்வளவுதான் உயர்மட்டத்தில் ஒருவர் வாழ்ந்தாலும் அவருக்கு குழந்தையில்லை என்றால் அவரை சமூகம் மட்டுமல்ல உறவுகளும் ஒரு மனிதனாகவே பார்;க்காது என்பதையும் இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது.  குழந்தைப் பேறில்லாதவர்களைச் சமூகம் புறக்கணிக்குமேயானால் அது சமூகத்தின் குற்றமே தவிர தனிமனிதன் குற்றமல்ல. அச்சமூகத்துக்கு முன்மாதிரியாக குழந்தைப் பேறில்லாதவர்களும் சமூகத்தில் உயர்வாக வாழலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒருநாவலை மலரன்னை படைத்திருந்தால் அவர் பாராட்டத்தக்கவர். ஒரு மனிதனுக்கு குழந்தை இல்லை என்றால் அதற்குத் தீர்வு குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பது ஒன்றுதான்; என்னும் கருத்தை மேலேழுந்தவாரியான இந்நாவல் முன்வைப்பதே இந்நாவலின் பெரும்பலவீனம்.குழந்தைப் பேறில்லாவிட்டாலும் ஒரு மனிதன் இயல்பாக தனக்குரிய சுயத்தோடு வாழலாம் என்பதை இந்நாவல் காட்டி இருக்குமேயானால் இந்நாவலை யதார்த்த நாவல் என்று கூட  கூறியிருக்கலாம். அதனையும் இந்நாவல் செய்யத் தவறிவிட்டது.

காகிதப்படகு நாவல் பெற்றாரின் சம்மதமின்றி காதலித்து திருமணம் செய்த பெண் யுத்த சூழலில் கணவனின் துணையின்றி நிராதரவான நிலையில் குழந்தையுடன் தனியொருத்தியாக நின்று எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறாள் என்பதை எடுத்துரைக்கிறது. குடும்ப வறுமையும் சமூகத்தின் ஏளனப் பேச்சுகளும் ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது என்பதை விளக்கும் இந்நாவல் வாழ்க்கையின் ஓட்டம் என்பது நம்பிக்கையில் தான் நடக்கிறது என்பதையும் விளக்கி நிற்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் காரணமின்றி சிறையில் அடைக்கப்படுவதும் உறவினர்களுக்கு அவர்களின் கைது குறித்த விடயங்கள் அறிவிக்கப்படாத நிலையில் அவரைப் பிரிந்து குடும்ப அங்கத்தவர்கள் படும் வேதனையையும் தந்தையை இழந்தநிலையில் குழந்தை எதிர்நோக்கும் உளவியல் சிக்கல்களையும் இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது. காண் உலகின் நிகழ்கால இருப்பை காட்சிப்படுத்தும் இந்நாவல் யதார்த்த வாழ்வின் அனுபவங்களாகச் சுவர்கிறது.

குடும்பத்தில் மனைவியின் இழப்பினால் கணவன் படும் துயரையும் அதேசமயம் மகளைப் பிரிந்த தந்தை படும் வலியையும் ஏக்கத்தையும் எடுத்துரைக்கும் நாவலே காலத்திரை. குடும்பத்தின் அச்சாணியும் ஆணிவேரும் மனைவிதான் என்பதை விளக்கி நிற்கும் இந்நாவல் சுயநலத்துக்காக மாமனாரை அனுசரித்து வாழும் சராசரி மருமகளையும் காட்சிப்படுத்துகிறது. அதேசமயம் பிறருக்கு பரோபகாரம் செய்து வாழும் வாழ்வது தான் உண்மையான வாழ்வு என்பதையும் இந்நாவல் கூறிநிற்கிறது. மகள் சிவகாமி தாயின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து ஒட்டும் உறவுமின்றி பதுளையில் வாழுகிறார். இச்சமயத்தில் சிவகாமியின் தாய் மங்களம் இறந்து விடுகிறார். எட்டுச் செலவு முடிய சிவராமனின் மகன் ஆருரன் தன்குடும்பத்தாருடன் வவுனியா சென்றுவிட இளைய மகன்  தன்குடும்பத்தாருடன் கொழும்பு சென்றுவிட மூத்த மகன் சரவணன் அவரோடு அவ்வீட்டிலேயே குடும்பத்தாருடன் தங்கி விடுகிறான். வீட்டின் வசதி கருதி சரவணனின் மனைவி நிர்மலாவும் சுயநலத்துடன் அவரை ஒருவாறு அனுசரித்து வாழச் சம்மதிக்கிறாள். கல்லூரியில் படிக்கும் அயல்வீட்டுச் சந்திரன் சிவராமன் வீட்டில் தங்கிப் படிப்பதுடன் அவருக்கும் உதவியாகவும் இருக்கிறான். கல்லூரியில் இருந்து யாழ் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சந்திரன் ராக்கிங் காலப்பகுதியில் தனக்கு அடுத்த வருடத்தில் படிக்கும் சிவகாமியின் மகள் தமிழரசியை காபாற்ற அந்த நட்பு இருவருக்கும் காதலாய் மாறுகிறது. இறுதியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்படும் சிவராமனை சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க தன் பணிநேரத்தில் தமிழரசி கவனித்துக் கொள்கிறாள். தாத்தா, பேத்தி இருவருக்குமான நட்பு கடந்த கால விடயங்களை இரை மீட்க உதவுகிறது. ஈற்றில் மகளும் தந்தையும் ஒன்று சேர நாவல் நிறைவுக்கு வருகிறது.

வாழ்தலில் பெறும் ஒட்டு மொத்த அனுபவங்களின் விளைவே இம்மூன்று நாவல்கள். ஒவ்வொரு முறையும் படைப்பாளி பயணிக்கும் பாதை புதியதன்று. அது ஈழத்து நாவல்கள் தொடர்ந்து ஓடிய தடத்திலேயே பயணிக்கிறது. மலரன்னையின் சிறுகதைகள் மனித மனங்களின் வலியைப் பேசுகின்றன. ஆண், பெண் உறவுகளின் மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், சிக்கல்களைப் பதிவு செய்யும் மலரன்னையின் நாவல்கள் குடும்பச் சிதைவுகளையும் குற்றவுணர்வில் அலைக்களிக்கப்படும் இதயங்களையும் வாழ்வின் மீளாத துயரங்களையும் காவிவருகின்றன.



இச்சா

0 comments


ஜீலை – செப்ரெம்பர் 2020 கலைமுகம் இதழில் வெளிவந்த கட்டுரை சேனனின் சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் நாவல் வருவதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரை (29.12.2019 – நீள்கரைப் பயணத்தில் இச்சா குறித்து உரையாடியதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரை)
அந்தோனிதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷோபாசக்தி 1984இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். இயக்கம் தந்த கசப்பான அனுபவங்களால் 1986இல் இயக்கத்தில் இருந்து வெளியேறியவர். இதன் வெளிப்பாடே அவரது ‘கொரில்லா’. புலிகளின் விசுவாசமிக்க அந்தோனிதாசன் ரொக்கிராஜாக மாறி இயக்கத்துக்குள் அன்று நிலவிய குழப்பங்களையும் இயக்கம் பற்றி வெளியில் நிலவிய சூழலையும் இந்நாவலில் பதிவு செய்தார். 1990களில் இந்திய இராணுவமும்; விடுதலைப் புலிகளும் முட்டிக்கொண்ட சமயம் இலங்கை அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதன் பிரதியீடே ‘ம்’ நாவல். பின்னர் அங்கிருந்த மீண்டு தாய்லாந்து சென்று பின் 1993இல் பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்துப் பெற்று இன்று பிரான்ஸ் நாட்டின் குடிமகனாக வாழ்ந்து வருகிறார். 2009 மே 18ஆம் நாள் நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்த சூழலில் அது கண்ட மானுட அவலங்களை அது காவி வந்த சொல்ல முடியாத கதைகளை உருத்திரிக்கப்பட்ட புனைவுகளை அவருடைய பொக்ஸ் கூறி நின்றது. அனுபவங்களில் இருந்து பெறப்படும் நுண்மையை இந்நாவல் கண்டடையவில்லை. புனைவின் வாயிலாக நாம் கண்டடையும் கற்பனையையும் செயற்கைத்தனத்தையும் இவரின் ‘இச்சா’ நாவலிலும் தரிசிக்கலாம்.
ஆழமனதில் உறைந்து போயிருக்கும் இயக்க அனுபவங்களை ஈழவர் கடந்து வந்த முட்பாதையை அதன் பேசப்படாத பக்கங்களை இந்நான்கு நாவல்களும் வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு விதமாகப் பேசின. துயரம், இழப்பு, மரணம், சித்திரவதைகள் என மனித அவலத்தின் அத்தனை பாடுகளின் உருக்காட்டியாக விளங்கும் ‘இச்சா’, புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போர்நிறுத்த காலகட்டம் முடிவுற்று நாலாம் கட்ட இறுதிப் போர் தொடங்கும் காலத்தின் பிரதியாய்த் தன்னை முன்னிறுத்துகிறது. கறுப்பு பிரதிகள் வெளியீடாக வெளிவந்த இச்சா கடந்தகால வரலாற்றை தான் கேட்டறிந்த சுய அனுபவத்தை புனைவுதர்க்கத்தினூடாக மீளுருவாக்கம் செய்கிறது.
‘இச்சா’ பல்பொருண்மையில் கட்டுண்ட சமஸ்கிருதச் சொல். திரோதனா சக்தியாகிய இச்சா சக்திக்கும் நாவலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக வாயிலாகவே ‘இச்சா’ என்ற சொல் தனக்கு பரிச்சயமானது என்பார் ஷோபாசத்தி. இச்சா போசனம் என்பது தாய்ப்பால். நாவலின் இருபத்தோராம் பக்கத்தில் சிறிய பதுமன் ஆலாவின் மார்பில் பாலருந்துவதன் வாயிலாக ஜனிக்கும் இச்சாபேசனம் 287ஆம் பக்கம் வரை அன்பின் உருவமாய் தாய்மையின் சின்னமாய் உரிமையின் ஆகுதியாய் உணர்வின் அபின்னமாய் நிலைகொள்கிறது.
கிறிஸ்துவின் கடைசி இரவில் தொடங்கும் கதை பேராட்டங்களில் ஈடுபட்டு எரிந்த நகரத்தின் மேம்பாலங்களின் கீழும் பாதாள மெத்ரோ நிலையங்களிலும் நகரத்தின் ஒடுங்கிய குறுக்கு வீதிகளிலும் இருட்பொந்துகளிலும் பசியாலும் தாகத்தாலும் வருந்தி துன்புற்று வதைபட்ட நொடிந்த மனிதர்களை இயேசுவின் பிரகிருதியாய் காணமுயற்சிக்கிறது. இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நிலைகொள்ளும் நாவல் கதைசொல்லியின் அலைப்புண்ட மனநிலைக்கூடாக நாவலின் கருவை வரித்துக் கொள்கிறது. மூன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடந்து இலங்கையே ஸ்தம்பித்த நிலையில் நாவலின் கதைசொல்லி ‘பஸ்ஸ போர்டா’வில் தங்கி இருந்த சமயத்தில் அம்மாவையோ உறவினர்களையோ தொடர்புகொள்ள இயலாமல் அல்லலுறுகிறான். குண்டுவெடிப்பில் கொலையுண்டவர்கள் பற்றிய குறிப்புக்களை மடிக்கணனி வாயிலாக தேடும்போது அங்கு மர்லின் டேமி என்ற வெள்ளைக்காரப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகமான அந்த மர்லின் டேமிதான், ஆலா சிறையிலிருந்து ‘உரோவன்’ மொழியில் எழுதிய குறிப்புகளைக் கொடுத்தவள். அக்குறிப்புகளை அடியொற்றி எழுதப்பட்ட நாவலே இச்சா.
இச்சா நாவலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைப் போராளியான ஆலாவின் வாழ்க்கை மூன்று பகுதிகளாக விவரிக்கப்படுகிறது. ஆலாவின் பிறப்பும் விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொள்வதும் முதலாம் பகுதியாக அமைய இரண்டாம் பகுதியில் ஆலாவின் சிறைவாழ்வு பேசப்படுகிறது. புலம்பெயர் தேசத்தில் அவள் அனுபவிக்கும் இன்னல்கள் மரணம் வரை தொடர்வதை மூன்றாம் பகுதி எடுத்துரைக்கிறது. ஆலா கிழக்கிலங்கையில் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்டத்திலுள்ள இலுப்பங்கேணியில் 08.01.1989 அன்று அடைமழைக்கால ஞாயிறு இரவில் பிறந்தாள். வெள்ளிப்பாவையாகிய ஆலா பாடசாலையில் கல்விகற்கும் சூழலில் இனவாதத்திற்குப் பலியானாள். ஆலாவுக்கு பாடசாலையில் தமிழ் படிக்க ஆசையிருந்தும் சிங்களமே படிக்கும் சூழலமைந்தது. பின்னர் சிங்களப்பேரினவாதத்தின் செல்லப்பிள்ளைகளான ஊர்க்காவல் படையினரின் வன்முறைக்கு ஆலா இலக்காகிறாள். அவ்வன்முறையே அவளைப் புலிப்போராளியாக மாற்றுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஆலா அங்கு தற்கொலைப் போராளியாக மாறுகிறாள். தன் இலக்கை நோக்கி நகரும் தருணத்தில் அவளது தற்கொலைத் தாக்குதல் தோல்வியில் முடிய அவள் கைது செய்யப்பட்டு 300 ஆண்டுக்கால தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
கண்டிராஜ வீதியில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்ட ஆலா ஆறாத ரணங்களால் சொல்லவொன்னா துன்பத்தை அனுபவிக்கிறாள். தனிமையும் வெறுமையும் அழுத்த அதற்குள் அல்லாடும் ஆலா தன் நினைவுகளின் வழி கடந்த காலத்தை கடக்க முற்படுகிறாள். தன் வாழ்நாளில் கழித்த கணங்களை காகிதத்தில் எழுதி மனரணங்களை ஆற்ற முயல்கிறாள். அவள் அனுபவவழி நாவல் நகரும் பட்சத்தில் சிறையிலிருந்து அவளை மீட்கும் தேவதூதனாக புலம்பெயர்ந்த தமிழரான வாமதேவன் வருகிறார். சிறைமீட்ட அவளை அவரே திருமணமும் செய்துகொள்கிறார். லன்டோ ப்ளான்சே நகருக்கு அழைத்துச் சென்று அவளுடன் பெயருக்கு குடும்பமும் நடாத்துகிறார். ஒரு குழந்தைக்கு தாயாகும் ஆலா புலம்பெயர்ந்த நாட்டில் கணவனால் வஞ்சிக்கப்பட்டுகிறாள். பூமியின் பனித்துருவத்தின் விளிம்பில் பாதியும் பால்டிக் சமுத்திரத்துக்குள் பாதியுமாகக் கிடக்கின்ற லன்டோ ப்ளான்சே நகரொன்றில் அவள் மரணிக்கும்வரை, அவளது உள்ளுணர்வுகளையும் அதன் வெளிப்பாடாகத் தோன்றும் புறச் செயல்களையும்; கொண்டதே இச்சா நாவலின் இறுதிப்பகுதி. நிஜத்தில் சிறையிலிருந்து விடுதலை பெறாமலேயே ஆலா இறந்துபோகிறாள். போராளியின் மரணம் மகத்தானதாக அமையவேண்டுமென்ற மனநிலை கொண்ட கதைசொல்லி அவளை சிறையில் இருந்து மீட்டெடுத்து அவளுக்கு திருமணமும் செய்து வைத்து புலம்பெயர் நாட்டுக்கு அழைத்து வந்து அவளை ஒரு குழந்தைக்கு தாயுமாக்கி சாகடிக்கிறார்.
தாய்லாந்தில் நெற்றிக்கண் பத்திரிகை வாயிலாக அறியப்பட்ட அந்தோனிதாசன் பிரான்ஸ{ல் ‘நான்காம் அகிலம்’ என்ற சர்வதேச ட்ராட்ஸிகிய கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து செயற்பட்டவர். பின் அன்ரனிதாசன், சிவசக்தி என்ற புனை பெயரில் தமிழ்த்தேசியவாதியாக அறியப்பட்ட அந்தோனிதாசன் புலிஎதிர்ப்பு அரசியலுக்கூடாக ஷோபாசக்தியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். அம்மா இதழில் வெளிவந்த ‘எலிவேட்டை’ சிறுகதையே இவரை சோபாசக்தியாக அடையாளப்படுத்தியது. தேசத்துரோகி முதல் எம்.ஜி.ஆர் கொலை வழக்கு வரை புலி எதிர்பாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டஷோபாசக்தி அதனாலேயே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர்வாழ் தமிழர்களிடமும் நன்கறியப்பட்டார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தமே அவரது புனைவுகளின் அடிநாதமாக அமைந்தன. எள்ளலும் இகழ்ச்சியும் கொண்ட அங்கத மொழிநடை கைவரப்பெற்றவராக அவர் இருந்தமையால் அவரது புனைவுகள் அதிகம் பேசப்பட்டன. யுத்தம் முடிவுக்கு வந்ததும் நுண்மையான உத்திகளின் வாயிலாக தம் படைப்புக்களைத் தக்கவைத்துக் கொண்டார். இதற்கு அவருக்கு தேர்ந்த வாசிப்பு கைகொடுத்துதவியது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை அவர்களின் தேவையை நன்கறிந்த ஷோபாசக்தி அதற்கேற்ற மனோநிலையில் கற்பனை சார்ந்த தன்புனைவுகளை ஊகங்கள் வாயிலாக நடப்பியலுக்கு புறம்பாகப் படைக்கத் தொடங்கினார். fiction என்ற பெயரில் முன்னாள் போராளிகள் குறித்து இவர் எழுதிய ‘இச்சா’ மற்றும் ‘பொக்ஸ்’ ஆகிய இருநாவல்களின் உள்முக அரசியலை விளங்கிக்கொண்டவருக்கு ஷோபாசக்தியின் தந்திரோபாய மனஆற்றுகையை விளங்கிக்கொள்ள முடியும்.
கதையின் நோக்குநிலை நிரல்படுத்தப்பட்ட அத்தியாயங்கள் வாயிலாக அகக்குவியப்படுத்தலுக்கூடாக காட்சிப்படுத்தப்படுகிறது. தலைப்பை உள்வாங்கி எழுதப்பட்ட நாவலின் ஒவ்வொரு பகுதிகளும் கதைப்போக்கு ஏற்றவகையில் சின்னச்சின்ன அத்தியாயங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. சில அத்தியாயங்கள் ஒரு தலைப்பின் கீழ் தம்மை முடித்துக் கொள்கின்றன. நாவலின் நேர்த்திக்கு தேர்ந்த அத்தியாய வைப்புமுறையும் உதவுகின்றது.
நாவலில் கையாளப்பட்ட பிறிதொரு உத்தி கற்பனை மொழியான ‘உரோவன்’ மொழியில் ‘ஆலா’ எழுதியிருக்கும் குறிப்புகளின் வழி கதைசொல்லுதல். இந்தக் கதையை முழுவதும் அறிவதற்கு ‘உரோவன்’ மொழி அவசியம் எனக்கூறிய ஷோபாசக்தி இம்மொழியை உரலிக்’ மொழிக்குடும்பத்தின் கிளைமொழியான தெற்குப் ஃபின்னிக் மொழியைச் சார்ந்தது எனக் கூறுகிறார். உரோவன் மொழியில் 29லிபிகள் உள்ளன. இவற்றில் 26லிபிகள் ஆங்கில மொழியிலுள்ள அதே வடிவத்தைக் கொண்டிருப்பினும் உச்சரிப்புக்களில் வேறுபாடு கொண்டவை எனவும் கூறுவார். 15 தொடக்கம் 16 வரையுள்ள பக்கங்கள் உரோவன் மொழி குறித்துப் பேசினாலும் அம்மொழிப் பிரயோகம் நாவலில் பெருமளவு கையாளப்படவில்லை. 15ஆம்16ஆம் பக்கங்களின்றியே நாவலை சாதரண வாசகனால் விளங்கிக்கொள்ள முடியும். கையாளப்பட்ட புதிய உத்தி என்ற வகையில் தோற்றம் பெறும் உரோவன் மொழி நாவலில் எத்தகைய செல்வாக்கையும் செலுத்தவில்லை. உரோவன் மொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் பல சொற்கள் v.c.கந்தையாவின் மட்டக்களப்பு தமிழகம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. ளுipநடயள என்பதற்கு சித்திரம்;பூச்சி எனக் கூறுவார். சித்திரப்பூச்சி என்பதற்கு சிற்றெறும்பு என்பது பொருள் (மட்டக்களப்பு தமிழகம் பக்- 97). kood என்பதற்கு அசப்பியம் என விளக்கமளிக்கப்பட்டது. உண்மையில் அச்சொல் அதப்பியம் என்ற சொல்லின் திரிந்த வடிவம். அதப்பியம் என்றால் மறைத்துச் சொல்ல வேண்டிய சொல். ஒல்லாந்தர் வரவால் தமிழுக்கு கிடைத்த அறுத்தப்பால்கிழங்கு என்னும் சொல் உருளைக்கிழங்கை குறிக்கும். கட்டிறம்பூச்சி என்பது கட்டெறும்பையும் சரிசாமம் என்பது நடுஇரவையும் ஒசில் என்பது அழகு, அழகின்மை என இரு பொருண்மையிலும் கட்டுறும் சொற்களாகும்.
இலுப்பங்கேணி கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பதுமர் குடி’ என்ற பகுதியை உயிரோட்டமாகக் காட்சிப்படுத்தவும் ஷோபாசக்திக்கு மட்டக்களப்பு தமிழகம் என்ற நூலே உதவுகிறது. யதார்த்தம் கடந்த விந்தையான சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட இப்பகுதி கல்லோயக் கிராமத்தின் ஆதித் தமிழ் குடிகளின் வாழ்வியலை உரைக்கும் பகுதி. கல்லோயாக் கிராமம் இலங்கை வரைபடத்தின் வெறும் புள்ளியாய் தெரிந்து மறைந்து போகும் இடம் மட்டுமல்ல. கலாசாரத்தின் சாரம்…அதனைத் தாங்கி நிற்கும் ஆத்மா என மனிதனின் உணர்வும் இயற்கையும் ஒன்றர கலந்து பின்னிப் பிணைந்து வாழுமிடம். வரலாறு, கலாசாரம். மரபின் நீட்சியென மையங்கொள்ளும் பதுமர் குடியை உணர்வும் உயிரும் சங்கமிக்கும் இடமாக காட்சிப்படுத்துவதற்கு மட்டக்களப்பு தமிழகத்தில் இடம்பெறும் ‘பாம்புக்கடி’ என்ற அத்தியாயம் உதவுகிறது.
“நாகசாதிப்பாம்புகளை மட்டும் எட்டுவகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவ்வெட்டு வகையும் நான்கு குலப்பகுப்புக்குள் அடங்குவ. முதலாவதான பிராமண சாதியில் அநந்தன் குளிகன் என்னும் இருவகை நாகமும் இரண்டாவதான அரசசாதியில் வாசுகி, சங்குபாலகன் என்னும் இரண்டும் மூன்றாவதான செட்டிநாகத்தில் தக்கனும் மாபதுமனும் நான்காவதான சூத்திரசாதி நாகத்தில் பதுமனும் கார்கோடனும் சேர்வனவாகும்”
(மட்டக்களப்பு தமிழகம் -361)
கல்லோயா அணைக்கட்டு கட்டப்பட்டதை தொடர்ந்த கல்லோயாப் பள்ளத்தாக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களால் பள்ளத்தாக்கில் பரவணித் தமிழ் குடிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உயிர் ஆக்கினைகள் நிகழ்த்தப்பட்ட சமயத்தில் மக்கள் காடுகளுக்குள் பதுங்கிக் கொண்ட சமயத்தில் நான்கு சாதி நாகங்களும் கிராமத்தை காத்தன எனக் கூறி ஷோபாசக்தி மேற்குறிப்பிட்ட பாம்புகளின் பெயர்களை எடுத்தாள்வார். (இச்சா.பக்.45) நாவலில் நாகங்களின் சங்கு, சக்கரம், வில், புள்ளடி குறியிட்ட படங்கள் என விரியும் பகுதிகள் அனைத்தும் மட்டக்களப்பு தமிழகத்தை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டது. பதுமர் குடியில் இடம்பெறும் எட்டாம் அத்தியாயம் மந்திரங்கள் பற்றி உரைக்கிறது. மூதேவி அழைப்பு, உடற்கட்டு மந்திரம், உறுக்குமந்திரம். கவசநெட்டை, ஏவல்மந்திரம் பற்றி ஷோபாசக்தியால் குறிப்பிடும் பகுதிகள் மட்டக்களப்பு தமிழகத்தில் அமைந்துள்ள ‘மருந்தும் மந்திரமும்’ என்ற பகுதியில் அமைந்துள்ளவை. மட்டக்களப்பு தமிழகம் வாயிலாகப் பயணிக்கும் இப்பகுதி தமிழரின் ஆதிக்குடியிருப்பு, கலாசாரம் என விரிந்தாலும் அதில் ஊடாடும் மனித மனத்தின் கூட்டுச் சேர்க்கையையோ உயிர்பான பாத்திரங்களின் இயல்புசார் வாழ்க்கைமுறையையோ நாவல் எடுத்துக் காட்டவில்லை.
மடுவல் சீமையில் உற்பத்தியாகும் கல்லோயா ஆற்றின் வடகரையில் இங்கினியகலாவுக்கும் வங்கக் கடலுக்கும் சரி நடுவாக உள்ள இலுப்பங்கேணியைக் களமாகக் கொண்டு நாவல் படைக்கப்பட்டுள்ளது. இலுப்பங்கேணிக்கு ஆறுகிலோமீற்றர் தூரத்திலுள்ள அம்பாறை மாவட்டம். அங்கிருந்து பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள வீரமுனையும் நாவலில் ஒரு பந்தியில் எடுத்துக்காட்டப்படுகிறது. கிழக்கிலங்கையில் அதிகளவு வன்முறைகளைச் சந்தித்த இடங்களில் ஒன்று வீரமுனை. வீரமுனையிலுள்ள சிந்தாயாத்திரை பிள்ளையார் கோயிலில் வைத்து ஊர்காவற்துறையினரால் 400 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறி அதனை விரைவாகக் கடந்துவிடுகின்றார். இப்பந்தி விரித்து எழுதப்படவேண்டிய பந்தி. சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல் காரணமாக வீரமுனையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களும் அச்சுறுத்தப்பட்டன. குறிப்பாக வளத்தாப்பிட்டிய வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, கொண்டைவெட்டுவான், சொறிக்கல்முனை, அம்பாறை முதலான பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இக்கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை வளவினுள் 1990 யூன் மாதம் முதல் யூலை மாதம் வரை தஞ்சம் புகுந்த நிலையில் ஆகஸ்ட் 12ஆம் நாள் இத்துயரச் சம்பவம் நடைபெற்றது. கொண்டை வெட்டுவானில் ஆனி 29ஆம் திகதி நெருப்பு மூட்டப்பட்டு ஐம்பத்திஆறு பேர் கொளுத்தப்பட்ட சம்பவமும் நினைவு கூரத்தக்கது.
06.08.1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள திராய்க்கேணிக் கிராமத்து மக்களின் உடைமைகளை இராணுவத்தினரின் துணையோடு சூறையாடிய தமிழின விரோதசக்திகள் அங்கிருந்த பத்து பேரைக் கொன்று ஒழித்ததோடு நில்லாது அப்பாவித் தமிழ் மக்கள் முப்பத்தாறு பேரை பெரியதம்பிரான் ஆலயத்தில் வைத்தும் கொன்று குவித்தனர். இச்சம்பவத்தில் மொத்தம் 46பேர் கொல்லப்பட்டனர். வடக்கே ஒலிவிலுக்கும் தெற்கே பாலமுனைக்கும் இடையில் 360குடும்பங்களுடன் இருந்த பழம் பெரும் கிராமமான அக்கிராமம் முழுமையாக அழிக்கப்பட்டு இன்று இல்லாமலே போய்விட்டது (அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் -ஜெயானந்தமூர்த்தி-பக்.48-61). 1985ஆம் ஆண்டுக்கு முன் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்த மீனோடைக்கட்டு கிராமமும் முஸ்லிங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று தமிழர்கள் இல்லா முஸ்லிம் கிராமமாகக் காணப்படுகின்றது.
நாவலில் இடம்பெறும் ‘இச்சா’ என்ற பகுதி ஆலாப்பறவை பற்றி எடுத்துரைக்கிறது. “ஆலா, பறவையினங்களிலேயே அதிக தூரம் பறக்கும் வல்லமையுடையது. பூமியின் ஒரு துருவத்தில் இருந்து எதிர்த்துருவம் வரை பறக்கக் கூடியது” என விக்கிபீடியாவில் உரைக்கப்பட்டதை அப்படியே ஷோபாசக்தி வழிமொழிகிறார். ஆனால் வெள்ளைநிற மார்பைக் கொண்ட ஆலாப்பறவையை கடற்கழுகு என தமிழ் லெக்சிகன் கூறுகிறது. வின்சிலோ அகராதியும் ‘கடற்கழுகு’ என்றே கூறுகிறது. இப்பறவைக்கு நீண்ட தூரம் பறக்கும் ஆற்றல் கிடையாது என ஆலாப்பறவையை அறிந்தவர்கள் இன்றும் இலங்கையில் உரைப்பர். லண்டனில் நடந்த இச்சா அறிமுகவிழாவில் மேற்குறிப்பிட்ட இரு அகராதிகளையும் சுட்டிக்காட்டி நித்தியானந்தன் இதனைத் தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் ஷோபாசக்தி இதனை மறுத்து பிரான்சில் ஆலாப்பறவையை ‘ஸ்தேர்ன்’ எனக் கூறுவர் எனக்கூறி இப்பறவை வடதுருவத்தில் இருந்து தென்துருவம் பறக்கக்கூடியது என உரைப்பர். கடல்வாழ் பறவையாகக் கருதப்படும் ஸ்தேர்ன் மீன்களைப் பிடித்துண்ணும் பறவை. இப்பறவை மூன்றரை அடி நீளமுடையது இதனுடைய இறகுகள் ஏழு அடிவரையும் காணப்படும் எனக்கூறுவர்.
வேட்டையின் மேல் மோகமும் வீரமும் கொண்ட ஆலாப்பறவையின் நிழல்வடிவமே உயிரும் உணர்வும் வேட்கையும் கொண்ட கப்டன் ஆலா. ஆலாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட ‘இச்சா’ தேசத்தின் விடியலுக்காய் மூடிண்ட சிறைக்குள் உருச் சிதைக்கப்பட்டு நம்பிக்கையற்று எதிர்காலமின்றி வாழ்ந்து மடிந்த – மடியும் அப்பாவி போராளிகளின் நிஜவுருக்களை தன்னளவில் புனைவாகப் பதிவு செய்கிறது. பதின்ம வயதுக்கான துடிப்பும் திட்பமும் மூர்க்கமும் கொண்ட ஆலாப் பாத்திரம் கடவுளால் சபிக்கப்பட்ட ஆத்மா. இனப் படுகொலையும் யுத்தமும் நிகழ் இலக்கியமான ஈழச்சூழலில் துயரம், இழப்பு, மரணம், சித்திரவதைகள், இனம், அடையாளம், மொழிவாதம், பாலியல் என விரியும் சோபாசக்தியின் இந்நாவல் சிறையில் நீத்துப் போன பெண்ணுக்கு மாட்சிமிக்க மரணத்தை அளிக்கிறது. துயர்காவியாகவும் துயருறுவதற்காகவும் படைக்கப்பட்ட ஆலாப் பாத்திரத்துக்கு நிஜவடிவை அளிக்க விரும்பிய ஷோபாசக்தி பின்னட்டையில் அலங்கரிக்கப்பட்ட பெண் ஒன்றின் புகைப்படத்தை இட்டு புனைவுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறார். இத்தருணத்தில் சுந்தர ராமசாமி, ‘புகைப்படம்’ குறித்து எங்கள் இளங் கவிஞருக்கு அங்கதமாகக் கூறிய வார்த்தைகள் என்னையும் அறியாமல் நினைவுக்கு வருகிறது.
“புகைப்படம் முக்கியமென்றால் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டது
அடியில் இடப்பட்டிருக்கும் வரிகள். அவை எண்ணிக்கையில் அதிகம் இல்லை.
ஒவ்வொரு வரியும் ஒரு பிரபஞ்சத்தை முழுங்கிக் கொண்டிருக்கும் போது எதற்கு
சொற்களை வீணாக்க வேண்டும். அந்த வரிகள் நமக்கு புரியாமல் இருக்கலாம்.
ஆனால் அவை நம் மனத்தை கவருகின்றன. தெளிவான தமிழ் எழுதுவதை
நினைத்து வெட்கப்படுகிறோம்”. (சண்டே எக்ஸ்பிரஸ் 06.04.2003)
நாவலில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல கதைப்பின்னலும் பாத்திரவார்ப்பும் அமைந்திருக்க வேண்டும். வாழ்க்கை விளக்கத்தை நோக்கிச் செல்லும் நாவல்களில் கதைப்பின்னல் முனை தாழ்ந்தும் பாத்திரவார்ப்பு உயர்ந்தும் காணப்படும். நாவல் சம்பவங்களின் கோவையாக இல்லாமல் வாழ்க்கையை அளிக்கின்ற பாத்திரங்களுக்கூடாக காரண காரிய தொடர்புகளுடன் விபரிக்கப்படும் போது நாவல் முழுமை பெறும். நாவலில் ஆலாப்பாத்திரத்தின் தனித்தன்மையைப் பேணவும் அதனை தலை சிறந்த பாத்திரமாக உருவகிக்கவும் ஷோபாசக்தியால் உருவாக்கப்பட்ட பாத்திரமே வாமதேவன். ஆலாவுக்கு உயிர் கொடுப்பதற்காக எதிர்நிலைத் தன்மைகளோடு படைக்கப்பட்ட தட்டையான இப்பாத்திரம் மிகப்பலவீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறையில் ஆலாவின் விடுதலைக்கு உறுதுணையாக நின்று அவளைக் கரம்பிடிக்கும் வாமன் திருமணம் முடித்த கையோடு அவளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கின்றான். அவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில் இணைப்பு விமானத்துக்காக பன்னிரண்டு மணி நேரம் இருவரும் காத்து நிற்கும் போது விடுதியில் மிருகத்தனமாக தனது இச்சையை தணித்துக் கொள்கிறான் வாமன். அதன்பின் அவளை ஒதுக்கிவிடுகிறான்; பெண் புலியொன்றிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வாமன் திருமணம் செய்து கொண்டாரா? அல்லது போராளி ஒருவருக்கு வாழ்வளித்து சமூக அந்தஸ்தை உயர்த்த திருமணம் செய்து கொண்டாரா என்னும் கேள்விக்களுக்கான விடைகளும் உணர்வுபூர்வமாக நாவலில் கூறப்படவில்லை. ஒரு பெண்ணிடம் அதிகாரத்தை மட்டுமே பலாத்காரமாகச் செலுத்த வாமதேவனுக்கு அடிப்படையாக இருந்த பின்னணி என்ன? ஒரு போராளிக்கு மறுவாழ்வளித்த வாமதேவன் அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள ஏன் முனையவில்லை என்ற பலகேள்விகளுக்கு விடையின்றியே நாவல் நகர்த்தப்படுகிறது. கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான பிரச்சினைகள், வேற்றுமைகளின் பிற்புலங்களைக் கூட இந்நாவல் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஆலாவை ஆலாபணம் செய்வதில் காட்டிய அக்கறையும் கரிசனையும் ஏனைய பாத்திர உருவாக்கத்தில் கைக்கொள்ளவில்லை. ஆலாவிடம் சிறிதும் அக்கறையற்ற வாமதேவன் ஆலாவின் குழந்தை மேல் ஆர்வம் கொள்ள காரணமான உளவியற் பின்னணிகளையும் நாவல் வெளிப்படுத்த தவறிவிட்டது. விடுதலைப் போராட்டம் மறுவடிவம் எடுத்துள்ள புலம்பெயர்ந்த தேசத்தில் போராளிகளுக்கு உதவுதல், மறுவாழ்வளித்தல், தேசத்தை மீளக்கட்டுதல் போன்ற விடயங்கள் கூரிய கவனத்தை பெற்றுள்ள நிலையில் அது தரும் சமூக அங்கிகாரம் தனித்துவமானது. இதனைக் கொச்சப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாமதேவன் பாத்திரம் தேவைக்கேற்ற வகையில் தொட்டுக்கொள்ள ஊறுகாயாகப் பயன்படுகிறது. வெளிநாட்டில் வாழும் ஊடகம் நடாத்துபவர்களைச் சாடுவதற்காக உருவாக்கப்பட்ட இப்பாத்திரம் தன் பணியைச் செவ்வனே செய்தது. கருத்துநிலைக்கேற்ப உயிர்த்துடிப்பற்று செயற்கைத் தனமாக உருவாக்கப்பட்ட இப்பாத்திரம் மனதில் ஒட்டாத பாத்திரமாக சோபையிழந்து போகிறது.
ஷோபாசக்தி என்னும் தனிமனிதனின் சிந்தனை, நினைவு, செயலூக்கம் யாவற்றிலும் பாலியலே விஞ்சிநிற்பதால் இவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் பாலியல் வலிந்து திணிக்கப்படுகிறது. கதைசொல்லியின் மடியில் நண்பனின் மகள் அமர்ந்த போது சுயஇன்பம் காணும் ஒருவனின் மனப்பிறழ்வைக் கூறும் காயா கதையை எழுதிய ஷோபாசக்தி போர்னோகிராபியில் நடிக்கும் “ஜாஸ்மின்” என்ற கதாநாயகியை பின்னணியாகக் கொண்டு ரம்ழான் கதையையும் எழுதினார். இதே ஷோபாசக்திதான் தொழிற்சாலைப் பரிசோதனைக்கு பயந்து உள்ளாடை அணியாத தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு ‘எழுச்சி’ கதையை எழுதினார். இதன் தொடர்ச்சியை ‘பொக்ஸ்’, ‘இச்சா’ நாவலிலும் காணலாம். பெண்ணுடல் ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஷோபாசக்தியின் புனைவுகளில் விரசமே விஞ்சிநிற்கிறது. பெண் போராளிகளிடம் உடலிச்சையை தீர்த்தல் என்ற தார்மீக மந்திரம் பொக்ஸில் வெளிப்பட்டதைப்போல ஷோபாசக்தி இச்சாவிலும் புலப்படுத்தப்படுகிறது. ஆணின் பாலியல் இச்சைக்குள்ளாகும் போகவுடலாக பெண்ணிருப்பதையும் பெண்ணுடல் அழகியலாக மடைமாற்றமடைவதையும் ஷோபாசக்தியின் புனைவுகளில் காணலாம். இவருடைய இச்சா நாவலிலும் அப்பாச்சி கிழவனால் ஆலா சிறுவயதில் பாலியல் நெருக்கடிக்குள் உள்ளாவதை அருவருக்கத் தக்க வகையில் வரிவரியாக சித்திரிப்பது நாவலின் இயல்வோட்டத்தைச் சிதைக்கிறது. ஆடவனுக்கு எப்போதுமே பெண் பாலியல் நுகர்வுப்பொருள் என்பதை வாமதேவன் ஆலாவிடம் மூன்று தரம் தன்னுடலிச்சையை தீர்த்துக் கொண்டதன் வாயிலாகவும் வெளிப்படுத்துகிறார். காமம் துய்க்கப்பட்ட பின் ‘தோழி’ எவ்வாறு ‘கோழி’யாக (இச்சா.பக்.247) மாறிப்போனாள். இந்த நடத்தை மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது வாமதேவனின் உள்நோக்கம் தான் என்ன? என்ற கேள்விக்கு ‘இச்சா’வில் விடையில்லை.
தமிழ், சிங்களத் தொன்மங்கள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள் நாவலை அழுத்தமுள்ள புனைவாக உருமாற்றுகிறது. நாவலில் அனுபவ உண்மைகள் இயற்கையோடு இணைந்து வரவேண்டும். தன்போக்கில் கூடி வரும் அனுபவங்களின் கூட்டுக் கலவையாய் நாவல் உருப்பெறும் போது நாவல் வாசகனைச் சென்று அடைகிறது. இச்சா நாவலில் இடம்பெறும் கண்டிராஜன் கூத்து விபரணப்பதிவாய் இடம்பெற்றாலும் நாவலில் ஆன்மாவின் பதிவாய் ஒலிக்கிறது. கண்டி அரசனுக்கெதிராக கலகம் செய்த எகெலபொலவின் வளவான சிறைக்கூடத்தில் இருக்கும் ஆலாவின் எண்ணப் பதிவாய் கண்டிராஜன் கூத்தில் இடம்பெறும் சம்பவங்கள் நினைவுகூரப்படுகிறது. ஆலாவின் தந்தை ஒரு கூத்துக்கலைஞர். அவர் கூத்தில் எடுத்து நடிக்கும் பாத்திரம் கண்டிராஜனை எதிர்த்து கழகம் செய்யும் மந்திரியினுடைய மனைவி பாத்திரம். கலகம் அடக்கப்பட அரசபையில் மந்திரி குடும்பம் நிராதரவாய் தண்டனைக்கு நிறுத்தப்படுகிறது. மந்திரி மனைவி முன்னாலேயே மந்திரியின் இரண்டு ஆண்குழந்தைகளும் தலைவெட்டிக் கொல்லப்படுகிறார்கள். கண்டியரசனோ பிறந்து பத்து நாட்களேயான பச்சிளங் குழந்தையைக் கொல்ல வேறு ஒரு உபாயம் செய்கிறான். நெல் குத்தும் உரலில் போட்டு உலக்கையில் இடித்து கொள்வதே அது. அழுதுகொண்டே மந்திரி மனைவி குமாரிஹாமி அதைச் செய்கிறாள். காட்டுக் கொடிகளால் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டு மந்திரிகுமாரி சாமலிதேவி திக்கிரிமெனிக்கே கண்டி ஏரியில் மூழ்கடித்துக் கொல்லப்படுகிறாள். வலியும் வாதையும் இரத்தமும் மரணமும் மனிதனுக்கு பரவசமூட்டுகின்றன. திருவிழாக்களில் தினம் தினம் ஆடப்படுவதற்கும் போர்கால இலக்கியங்கள் அதிகளவில் விற்பனையாவதற்கும் இதுவே காரணம்.
ஷோபாசக்தியின் எழுத்துகளில் காணப்படும் அங்கதத்தையும் உத்திக்கூடாக கதைசொல்லும் முறைமையையும் இச்சா நாவலில் காணமுடியாது. மரபான கதைசொல்லல் முறைக்கூடாகவே நாவல் தன்னை நகர்த்திக் கொள்கிறது. சுல்தான் பப்பா மீது ஆலா கொள்ளும் ஒருதலைக்காதல்; கூடிய சில்லறைத்தனமாக இலக்கியரசனையற்று காட்டப்படுகிறது. தேர்ந்த வாசகனால் அதில் ஒட்டமுடியாது. ஆலா காதலுணர்வு மேலிட சுல்தான் பப்பாவின் மேசையில் ஒவ்வொரு நாளும் வெள்ளை அட்டையில் கவிதை வரிகளை எழுதி வைப்பதும் அவரின் நினைப்பில் தன்னை மறந்து இருப்பதும் தமிழ் சினிமாப் பாணியில் காட்டப்படுகிறது. ஷோபாசக்தி என்ற கதைசொல்லி ஜனரஞ்சக படைப்பாளியாக தோற்றுப் போகிறார். ஷோபாசக்தியின் இச்சா நாவலை ஓகோ என்று உரைப்பவருக்கு இது சமர்ப்பணம். சுல்தான் பப்பாவை கே.பி. எனப்படும் பத்மநாதனாக சித்திரிக்க முனையும் இறுதி அத்தியாயமும் நம்பும்படியாக இல்லை.
“ஆலா” எனும் வெள்ளிப்பாவையின் அகநிலைப்படிமங்களின் மொத்த அடையாளமே இச்சா. கடந்தகால வரலாற்றின் தொடர்ச்சியை தான் அறிந்த, வாசித்த, தரிசித்த களங்கள், நூல்களின் வழி மீள்நிலைப்படுத்த முயல்கிறார். கூர்ந்த மதியோடு தேர்ந்த நோக்கோடும் அறத்தின் வழி உரைக்கப்பட வேண்டிய வரலாற்றை பொறுப்பற்று சாகஸம் நிறைந்த புனைவின் வழி சித்திரிக்க முயன்றதன் விளைவே இச்சா. பயத்தோடும் கண்ணீரோடும் துயரத்தோடும் கடந்து போன கசப்பான வரலாற்றை மீளவலியுறுத்துவதாக அமையும் இந்நாவல் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக சிங்கள, முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள நோக்குநிலை என்ன என்பதையும் யுத்தம் முடிவுற்ற நிலையில் விளிம்புநிலை மனிதர்கள் குறித்த புரிதல் என்ன என்பதையும் இந்நாவல் வெளிப்படுத்த தவறிவிட்டது. அம்பாறையை களமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலில் கிழக்கு மாகாணப் பேச்சுவழக்கை பாத்திரங்கள் கொண்டிருக்கவில்லை. சொற்களை இழுத்துப் பேசும் ஒரு வட்டார வழக்கு அம்பாறை மாவட்டப் பேச்சுவழக்கில் காணப்படும். விமல்குழந்தைவேலின் நாவல்களில் இம்மொழியின் உயிரோட்டத்தை தரிசிக்கலாம். சிற்சில இடங்களில் நாவலில் ஆண்மொழி வெளிப்படவே செய்கிறது என்று விமர்சகர்கள் கூறினாலும் அக்கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. மொழியில் ஆண் - பெண் என்ற பேதமில்லை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். தமிழ் மக்களின் கிராமிய வாழ்வு அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் நாவலில் வெளிப்படும் அளவுக்கு சிங்கள – முஸ்லிம் மக்களின் வாழ்வும் அதன் ஊடாட்டமும் மருந்துக்கேனும் வெளிப்படவில்லை. வெள்ளையர்களால் அடிமையாகப் பிடித்துச் செல்லப்பட்டு வாழ்விழந்து நிர்கதியாகிப்போன (வேர்கள் நாவலில் வரும்) குன்ரா கின்ரேயின் பாத்திரத்தை விமர்சகர்கள் ஆலாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். குண்டா கிண்டேவின் வம்சத்தில் பிறந்த குன்ரா கின்ரோ தாய்நாட்டுப்பற்றும் குடிப்பெருமையும் கொண்டு உயிரும் உணர்வுமாக அலெக்ஸ் ஹேலியால் படைக்கப்பட்ட பாத்திரம். புனைவுக்கும் உண்மைக்கும் இடையில் செயற்கைத்தனமாக ஷோபாசக்தியால் உருவாக்கப்பட்ட பாத்திரம் ஆலா. குண்டா கிண்டே மகளுக்கு கதை கூறும் தருணங்கள் - தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவுமுறை தந்தை மகள் குறித்தேங்கும் கணங்கள் வேர்கள் நாவலில் உயிரோட்டமாக அலெக்ஸ் ஹேலியால் பதிவுசெய்யப்படுகின்றன. அலெக்ஸ் ஹேலியின் எழுத்து வாசிப்பின் எல்லைகளைக் கடந்து இயல்பாய் பரிசிக்கும் ஆன்மாவின் எழுத்து. ஆன்ம தரிசனத்தை உணர்வுகளின் பரிபாஷைகளை ஷோபாசக்தியின் புனைவுகளில் காணமுடியாது. எள்ளலும் கிண்டலும் கேலியும் நிறைந்த மொழிநடையில் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் கதை சொல்லும் போக்கே ஷோபாசக்தியிடம் காணப்படுவது. உயிரும் உணர்வும் கொண்டு அனுபவத்தின் வழி அலெக்ஸ் ஹேலியால் படைக்கப்பட்ட உண்மைப் பாத்திரமான குன்ரா கின்ரோவை ஆலாப் பாத்திரத்துடன் ஒப்பிடமுடியாது. கொடுமை, துன்பம் என்பவற்றில் கூட ஆலாவுக்கும் குன்ரா கின்ரோவுக்கும் இடையில் நிறைய வேற்றுமைகள் உண்டு. பொதுப் புத்தியற்று கொசுறு தத்துவங்களை உள்வாங்கி எழுதப்பட்ட ஷோபாசக்தியின் சராசரி நாவலை விமர்சகர்கள் முதற்தரமான நாவலாக சித்திரிக்க முனைவதின் உள்ளார்ந்த அரசியல் நோக்கம்தான் என்ன? என்பது என் சிற்றறிவுக்கு புலப்படவில்லை.
 

Copyright © 2010 • அகமுகம் • Design by Dzignine